June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சுகாதார சேவைகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி நிதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புது தில்லி, மே 6

நாட்டில் கோவிட் தொற்று நெருக்கடி சூழலில் நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ஆர்பிஐ அறிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில், பணப்புழக்க நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் தொற்றுக்கு எதிரான விரிவான உத்தியின் முதல் பாகம் என அவர் கூறினார்.

அவசர சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதற்கும், கொவிட் தொடர்பான சுகாதார கட்டமைப்பு மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கும், வங்கிகளுக்கு ரூ.50,000 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதியை ரெப்போ வட்டி வீதத்தில் 3 ஆண்டுகள் வரையில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்த பணப்பழக்க வசதி மூலம், பலருக்கு வங்கிகள் புதிதாக கடன் அளிக்க முடியும். இந்த கடன் வசதி 2022 மார்ச் 31ம் தேதி வரை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க, வங்கிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தனிநபர்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியை போக்க பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனிநபர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்கள், 2021 மார்ச் 31ம் தேதி வரை எந்த திட்டத்தின் கீழும் கடன் பெறாமல் இருப்பவர்கள் தீர்வு திட்டம் 2.0-ன் கீழ் ரூ.25 கோடி வரை கடன் பெற தகுதியுடைவர்களாக கருதப்படுவர்.

தீர்வு திட்டம் 1.0-ன் கீழ் மாற்றியமைக்கப்பட்ட கடன்களை பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்ளுக்கு கடன் தவணையை திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்பட்டது. தற்போது கடன் வழங்கிய நிறுவனங்கள் இந்த காலத்தை அதிகரிக்கலாம்.

மீதமுள்ள காலத்தை மொத்தம் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.

சிறு தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மாற்றியமைக்கப்பட்ட கடன்களை ஏற்கனவே பெற்றிருந்தால், கடன் வழங்கும் வங்கிகள், ஒரு முறை நடவடிக்கையாக மூலதன அனுமதி வரம்பை மறு ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இதே போல் மாநில அரசுகள் கடன் பெறும் வசதியிலும் ரிசர்வ் வங்கி தளர்வுகளை அறிவித்துள்ளது.

மேலும், வரையறுக்கப்பட்ட கேஒய்சி-யை டிசம்பர் 1, 2021 வரை பயன்படுத்த ஆர்பிஐ அனுமதிக்கும். சிறு நிதி வங்கிகள் ரூ.500 கோடி வரை சொத்து வைத்துள்ள சிறிய நுண் நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன. தனிநபர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு,குறு தொழில்களுக்களுக்கான கடன் தீர்மான கட்டமைப்பு அறிவிக்கப்படும். மார்ச் 30, 2021 நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 588 பில்லியன் டாலராக இருந்தது. இது உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரத்தின் கண்ணோட்டம் மிகவும் நிச்சயமற்றது மற்றும் அபாயங்களுக்கு உட்பட்டது. ஆனால், இந்தியா இந்த நெருக்கடியிலிருந்து மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்கமான மழைக்காலம் உணவு விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று பல அறிவிப்புகளையும் ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.-

Spread the love