July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சுதந்திர போராட்டத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் ரகுராம் ராஜன் கருத்து

சுதந்திர போராட்டத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நடந்த காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் ரகுராம் ராஜன் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருப்பதாக என நினைக்கிறேன்.

கொரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார அடிப்படையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும்போது, சமூகத்திற்கான பங்களிப்பும் இனி இருக்கும்.

கொரோனா வைரசின் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களினால் அரசு மக்களுக்கு உதவ முடியாமல் இருந்ததை பார்க்க நேர்ந்தது. பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை. அரசு எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை. பெருந்தொற்று காலம் நம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love