August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லாபம் நான்காவது காலாண்டில் ரூ.37 கோடி

சென்னை

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனமானது கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.36.60 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மார்ச் 31, 2021 உடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.36.60 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் முந்தைய 2019-20 ஆம் நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.82 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் இந்த நிறுவனம் வழங்கிய கடன் ரூ.389.60 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.459.38 கோடியாக உள்ளது.

நடப்பாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.191 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.218 கோடியாக இருந்தது.

நடப்பாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.1,254.05 கோடி மதிப்புக்கு கடன்களை வழங்கியுள்ளது. இது, மார்ச் 31, 2020 உடன்நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.2,112.09 கோடியாக இருந்தது.

வளா்ச்சி திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டில் கடன்பத்திரம் மற்றும் வங்கி கடன் மூலமாக ரூ.2,500 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love