வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
சிவகங்கை, ஜூன் 23
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சூடோமோனாஸ் பயன்பாடுகள் குறித்து காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன் விரிவான முறையில் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்த பயிர் நோய் மேலாண்மையில் பாக்டீரியா வகையைச் சார்ந்த எதிர் உயிர் கொல்லியான சூடோமோனாஸ் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நோய்க் காரணிகளை சிறப்பாக கட்டுப்படுத்துவதோடல்லாமல் நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை, பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இந்த எதிர் உயிரி பாக்டீரியம் கீழக்காணும் பயிர்களில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.
நெல் குலைநோய் மற்றும் இலை உறை கருகல் நோய் :
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் கலவையை கலந்து விதையுடன் நீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும். வடித்த நீரை நாற்றாங்காலில் ஊற்றி விடவும்.
நாற்று நனைத்தல் :
சூடோமோனாஸ் 2.5 கிலோவை 25 சதுர மீட்டர் நாற்றாங்காலில் உள்ள நீரில் கலந்து பின்னர் ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுக்களை குறைந்து அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும்.
வயலில் இடுதல் :
நாற்றுக்கள் நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாணஎரு (அல்லது) மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும்.
தெளிப்பு முறை :
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.2 சத கரைசலை நடவுக்கு பின்பு 45 நாட்கள் கழித்து நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாடகள் இடைவெளியில் மூன்ற முறை தெளிக்கவும்.
நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் பயறுவகைப் பயிர்களில் வேரழுகல் மற்றும் வாடல் நோய் – விதை நேர்த்தி :
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை கலந்து விதைக்கவும்.
வயலில் இடுதல் :
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாணஎருவுடன் கலந்து இடவும்.
காய்கறிப் பயிர்கள் – நாற்றழுகல், வேரழுகல் மற்றும் வாடல் நோய் :
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை கலந்து விதைக்கவும்.
வயலில் இடுதல் :
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எருவுடன் கலந்து இடவும்.
வாழை வாடல் நோய் :
வாழைக் கன்றில் உள்ள வேர்களை அகற்றி, களி மண் கலவையில் நனைத்து பின்னர் அந்த கிழங்கின் மீது 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை தெளித்து நடவும்.
வயலில் இடுதல் :
ஒருஎக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து வயலில் கன்று நடுவதற்கு முன் நிலத்தில் இட வேண்டும்.
குறிப்பு :
- இக்கலவையை பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது.
- இக்கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் உபயோகிக்க வேண்டும்.
- இக்கலவையை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம்.