May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்வால் நிலக்கடலை எண்ணெய்க்கு மவுசு அதிகரிப்பு

திருப்பூர், மே 6

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் கோடை மழை அடிப்படையில், இம்மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் விவசாயிகள் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடுவர். செப்டம்பர் மாதம் நிலக்கடலை அறுவடை செய்யப்படும்.

விளைவிக்கப்படும் நிலக்கடலை, சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதி மாதம் திங்கள்தோறும் நடக்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்படும். நிலக்கடலைக்கு கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.55 ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சேவூர் ஏல மையத்தில் குறைந்தபட்ச விலையே ரூ.62 ஆக இருந்தது.

பொதுவாக சேவூர் நிலக்கடலையை கொள்முதல் செய்யும் உள்ளூர் வியாபாரிகள், அதிகளவில் எண்ணெய் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் உள்ள வர்த்தகர்கள், கடலை மிட்டாய் மற்றும் சாக்லெட் தயாரிப்புக்கு, அதிகளவு நிலக்கடலை கொள்முதல் செய்கின்றனர்.

நிலக்கடலையை செக்கில் அரைத்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு சமீபகாலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அவை, ஒரு லிட்டர் ரூ.240 முதல் 260 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பெருமளவில் பயன்பாட்டில் உள்ள சூரியகாந்தி எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.160 முதல் ரூ.180 வரை இருந்தது.

விலை குறைவு என்பதால் பெரும்பாலும் இவ்வகை எண்ணெயின் பயன்பாடே அதிகமாக உள்ளது. தற்போது சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.200ஐ தாண்டியிருப்பதால் பொதுமக்களின் நுகர்வு ஆர்வம் நிலக்கடலை எண்ணெய் மீது திரும்பியுள்ளது. இதனால் அவற்றின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறியதாவது : விரைவில் துவங்கவுள்ள நிலக்கடலை ஏலத்துக்கு தயாராகி வருகிறோம். விவசாயிகளின் நலன் கருதி, குடோன் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை நிலக்கடலை எண்ணெய்க்கு தேவை அதிகரிக்க துவங்கியிருப்பதால், விவசாயிகள் போட்டி போட்டு நிலக்கடலை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

விவசாயிகள் நல்ல முறையில் விளைவித்து, மானாவாரி மண்ணுக்கே உரித்தான தரத்துடன் நிலக்கடலையை ஏல மையத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில் குவிண்டாலுக்கு ரூ.10,000 அதாவது கிலோவுக்கு ரூ.100 கூட பெற முடியும் என எதிர்பார்க்கிறோம். இதனால் விவசாயிகள் பெருமளவு லாபம் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love