தேனி, ஜூன் 10
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடப்பு காரிஃப் பருவத்தில் செயல்படுத்தவுள்ள பண்ணை ஆராய்ச்சி திட்டம் மற்றும் முன்னிலை செயல்விளக்க திட்டங்களுக்கான இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். சேர்மன் முனைவர் பச்சைமால், தலைமை வகித்து மையத்தின் செயல்பாடுகள், நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், கலந்து கொண்டு சிறுதானியங்களின் பயன்கள், வேளாண் பெருமக்களுக்கான திட்டங்கள், அன்றாட கடைபிடிக்க கூடிய சிறுதானிய உணவு பழக்க வழங்கள் பற்றியும், ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
சின்னமனூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, வேளாண்துறை திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார். முன்னதாக இந்த விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பொ.மகேஸ்வரன் பயிற்சியளித்தார். தொழில்நுட்ப வல்லுநர் சி.சபரிநாதன் வேளாண்மையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூல் மற்றும் வருமானத்தை உயர்த்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் ம.இரம்யா சிவசெல்வி, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியளித்தார்.