சென்னை, மே 10
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர அரசு 4 டிஎம்சி கிருஷ்ணா நீரை விரைவில் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கண்டலேறு அணையில் இருந்து, 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை, சாய் கங்கை கால்வாயில் ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த நீர் மூலம் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு குறிப்பிட்ட சில காரணங்களால் ஆந்திர அரசு கிருஷ்ணா நீரை வழங்கவில்லை.
தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 8.08 டிஎம்சி இருப்பு உள்ளது. அதிகபட்சமாக புழல் ஏரியில், 2.98 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில், 2.96 டி.எம்.சி.,உள்ளது. பூண்டியில், 1 டி.எம்.சி. உள்ளது. கோடை காலமென்பதால் சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதாலும், ஏரிகளில் நீர் இருப்பு குறைய வாய்ப்புள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரத்திடம் இருந்து முறைப்படி 4 டி.எம்.சி., நீரை பெற்று பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தேக்கி வைக்கும்படி, சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளிடம், தமிழகத்திற்கான நீரை பெற, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு வழங்க உள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.