September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சென்னை ஈசிஆர் உள்ளிட்ட 19 இடங்களில் போர்விமானங்கள் தரையிறங்கும் வசதி

மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

நாட்டில் சென்னை ஈசிஆர் உள்ளிட்ட 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று கட்கரி கூறியுள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதியை வியாழக்கிழமை (செப்.9) தொடங்கி வைத்துப் பேசுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பார்மரில் இந்திய விமானப் படை விமானத்தை நெடுஞ்சாலையில் அவசர காலங்களில், விமானத்தின் ஓடுப்பாதையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக இறங்குதளத்தில் தரையிறக்கி சோதித்துப் பார்ப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படைக்குச் சொந்தமான சி 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தில் பயணித்து ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் விமானப்படை தளபதி பதௌரியா ஆகியோர் தரையிறங்கினர். அடுத்ததாக ஜாகுவார், சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கியதுடன் அங்கிருந்து கிளம்பி சென்றன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கட்கரி பேசுகையில், விமானப்படை தளபதி தன்னிடம், விமானப் படை விமானத்தை தரையிறக்கும் வகையில் பார்மர் தேசிய நெடுஞ்சாலையை உருவாக்குவதற்கு 1.5 ஆண்டுகள் பிடித்ததாகக் கூறியதாகவும், 1.5 ஆண்டுகளுக்குப் பதிலாக 15 நாட்களுக்குள் விமானப்படை விமானங்கள் தரையிறங்கும் தரமான இறங்குதளத்தை உருவாக்க முடியும் என தான் அவரிடம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று கட்கரி கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இனி நமது தேசிய நெடுஞ்சாலைகளை ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும்.

Spread the love