சென்னை, மே 12
தமிழகத்தில் கடந்த 4ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
அதன்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 14ந் தேதி தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல், 15ந் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் இன்று அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்திலும், 14 மற்றும் 15ந் தேதிகளில் 50 முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.