August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம்

இராமநாதபுரம், மே 19

சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரத்தில் 2,800 எக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன. விவசாயிகள் திறந்தவெளி கிணறுகள், வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

தண்ணீர் ஆவியாகி நிலத்தடியில் செல்லுதல் போன்ற காரணங்களால் வீணாகிறது. தோப்பில் களைகளும் அதிகமாக முளைக்கின்றன. எனவே, நீரை சிக்கனமாகவும் தென்னை மரங்களுக்கு தேவையான அளவு வேறு பாகங்களில் அளிப்பதற்கு சொட்டுநீர் பாசனம் உதவுகிறது. இதன் மூலம் நீர் வீணாவது தவிர்க்கப்படும். பாரத பிரதமர் நுண்ணீர்பாசன திட்டம் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு தென்னை மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு வேளாண்மை, உழவர் நலத்துறை மூலமாக 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுடைய விவசாயிகள் பண்ணை குட்டை அல்லது கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். பயனாளி பெயரில் நேரடி பட்டா இருக்க வேண்டும். கூட்டுபட்டா இருந்தால் வாரிசு சான்றிதழ், வாரிசுகளின் சம்மத பத்திரம் ஆவணங்களின் அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் அமர்லால் தெரிவித்தார்.

Spread the love