August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம்

விருதுநகர், ஜூலை 22

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் கீழ் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் மானியத்துடன் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. ஒரு விவசாயி 5 ஏக்கருக்கு கீழ் புஞ்சை நிலத்திலும், 2.5 ஏக்கருக்கு கீழ் நஞ்சை நிலத்தில் உள்ள விவசாயிகள் சிறு/குறு விவசாயிகளாக கருதப்படுகின்றனர். இவ்வகை விவசாயிகள் வருவாய்த்துறை மூலம் சிறு/குறு விவசாயி சான்றிதழ் பெற்று அத்துடன் பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பித்து 100 சதவீதத்தில் சொட்டுநீர் பாசனம் (Drip) அல்லது தெளிப்புநீர் பாசனம் (Sprinkler) மானியத்துடன் தங்கள் சாகுபடி பயிர்களுக்கு அமைத்து அதிகப்படியான பரப்பளவு நீர்ப்பாசனம் மேற்கொள்ளலாம்.

சிறு/ குறு விவசாயி சான்றிதழ் பெற முடியாத விவசாயிகள் இதர (Others) விவசாயிகள் ஆவார். இவ்வகையான விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மேற்கண்ட பாசன முறைகள் தங்கள் சாகுபடி பயிர்களுக்கும் அமைத்திடலாம். மேலும் ஏற்கனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இதுபோன்ற சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்புநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மேற்கண்ட பாசன முறைகளை கடைப்பிடித்து அதிகப்படியாக வீணாகும் பாசன நீரினை சிக்கனப்படுத்தி கூடுதல் பரப்பினை சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும் இவ்வகை மானியத்தில் பாசன முறைகள் அமைத்து விவசாயிகள் பயனடைய வேளாண்மை உதவி இயக்குனர் எம்.பி. உதயகுமார், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தொடர்புக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Spread the love