கோவை, மே 17
ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளுக்காக, ரூ.5.64 கோடிக்கு, 2,550 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்த, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோவை மாவட்டம், ஆனைமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி கூறுகையில், 2021-2022ம் ஆண்டுக்கான, சொட்டு நீர் பாசன திட்டத்துக்கு, தோட்டக்கலைத்துறைக்கு அரசு, ரூ.5.64 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிதியை கொண்டு, 2,550 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில் அமைத்து தரப்படுகிறது. ஏழாண்டுகளுக்கு முன், சொட்டு நீர் அமைத்த விவசாயிகளும், இந்த மானியத்தில் குழாய்களை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு, பல வித உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. டீசல் பம்ப் செட் அல்லது மின் மோட்டார் பம்ப் செட் ஒன்றுக்கு, ரூ.15,000, கிணறு, ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீர் எடுத்து வருவதற்கு குழாய்கள் பொருத்த, ஒரு விவசாயிக்கு, ரூ.10,000 மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், நீரை தேக்குவதற்காக தரை நிலை தண்ணீர் தொட்டிகள் அமைக்க ஒரு தொட்டிக்கு, ரூ.40,000 மானியம் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என அவர் தெரிவித்தார்.