செங்கல்பட்டு, ஏப்.1
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது அனைத்து வட்டாரங்களிலும் சம்பா மற்றும் நவரை பருவ நெற்பயிர் அறுவடை நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், சொர்ணவாரி பருவ நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்தலும் மற்றும் பருவத்துக்கேற்ற இரகங்களை தேர்வு செய்வதும் மிக முக்கியமானதாகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி பருவதில் CO 51, ADT 43, ADT 37 போன்ற இரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் ADT 36, ASD 16, ASD 18, MDU 5, IR 50, CO 47, ADT (R) 45, ADT (R) 47, ADT (R) 48, CORH 3 போன்றவை சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களாகும். விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தனியார் விற்பனை நிலையங்களிலும் மேற்கண்ட சான்று பெற்ற இரகங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ADT 37 பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடியது மற்றும் நல்ல விளைச்சலை தரக்கூடிய இரகமாகும்.