October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சோயா எண்ணெயில் 40 சதம் வரை பாமாயில் கலப்படம்: கட்கரி தகவல்

புது தில்லி, அக்.12

சோயா உற்பத்தி குறித்து சர்வதேச மாநாடு புது தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சமையல் எண்ணெய்களில் பாமாயிலை கலப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சோயா எண்ணெய் போன்றவற்றில் பாமாயிலை கலப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சோயா எண்ணெயில் 40 சதம் வரை பாமாயில் கலக்கப்படுகிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எண்ணெய் கலப்படத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். சில எண்ணெய் பாக்கெட்களில் வேறு எண்ணெய் கலந்தால் அதுபற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால் அந்த எழுத்துக்களை கண்ணுக்கு தெரியாத சிறிய எழுத்தாக பதிவு செய்கிறார்கள். இதை மக்கள் யாரும் படித்து பார்ப்பது இல்லை என்றார்.

எனவே வேறு எண்ணை கலக்கக்கூடிய பாக்கெட்களில் அதுபற்றிய குறிப்புகள் கொட்டை எழுத்துக்களில் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு தேவையான சமையல் எண்ணையில் 65 சதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். மேலும், இந்தியாவில் சோயா பீன்சின் உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க வழி ஏற்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக தொழில் கூடங்களும், ஆராய்ச்சி அமைப்புகளும் தேவையான பணிகளை செய்ய வேண்டும். இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களுக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால் நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய்கள் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love