August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சோளத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள்

சோளத்தில் சக்தி, தயமின், ரிபோபிலேவின், போலிக் அமிலம் போன்ற பி வகை வைட்டமின்கள் உள்ளன. பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் அதிக அளவில் உள்ளது. இரும்பு,துத்தநாகம், காப்பர் போதுமான அளவு உள்ளது. சோள புரதம் புரோலமின் ஆகும். குறைந்த சீரண தன்மை உள்ளது. அரிசியை விட 2 மடங்கு அதிகமான நார்ச்சத்து உள்ளது. பீட்டா கரோட்டீன் உள்ளது.
சோள தானியத்திலிருந்து ஊட்டச்சத்து நி[றைந்த பல வகையான உணவுகளை தயாரிக்கலாம்.

முட்டை சேர்க்காத சோளம் கேக்
சோள மாவு 1 கப், பால் பவுடர் 0.5 கப், எண்ணெய் 1 கப், பேக்கிங் பவுடர் 1 கிராம், தயிர் 0.5 கப், வெனிலா எஸன்ஸ் 2 மி.லி. அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து பேக்கிங் பாத்திரத்திலிட்டு 180° செ.கி. வெப்ப நிலையில் அடுமனை அடுப்பில் 30 நிமிடம் வைக்க வேண்டும்.

சோளம் கேக்
சோள மாவு 100 கிராம், வெனிலா எஸன்ஸ் 3 மி.லி., பேக்கரி @பேட் 100 கிராம், பேக்கிங் பவுடர் 3 கிராம், முட்டை 2, கொக்கோ பவுடர் 5 கிராம், சர்க்கரை 100 கிராம், உப்பு 2 கிராம், பால் 20 மி.லி. அனைத்து உலர் பொருட்களையும் சலிக்க வேண்டும். சர்க்கரை பவுடர் மற்றும் முட்டை வெள்ளை கரு பகுதியை சேர்த்து கலக்க வேண்டும். பால், எஸன்ஸ், முட்டை மஞ்சள் கரு பகுதியை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு சோள மாவு, உப்பு, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்க வேண்டும். பேக்கிங் பாத்திரத்திலிட்டு 180° செ.கி. வெப்ப நிலையில் அடுமனை அடுப்பில் 25 முதல் 30 நிமிடம் வைக்க வேண்டும்.

சோள அவல்
சோள தானியங்களை சுத்தம் செய்து, 5 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளியில் உலர்த்தி, ஒரு கிலோ தானியத்திற்கு 50 மி.லி. தண்ணீர் சேர்த்து கலக்கி, மூடிய கொள் கலனில் 3 மணி நேரம் நிலைப்படுத்த வேண்டும். இயந்திரத்தின் மூலம் உமியை நீக்கி, சல்லடையில் சலித்து, தரம் பிரித்து, சூரிய ஒளியில் 6 முதல் 8 மணி நேரம்; உலர்த்த வேண்டும். உமி நீக்கப்பட்ட சோள தானியங்களை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும். 70° செ.கி. வெப்ப நிலையில் மின் உலர்த்தியில் 1 மணி நேரம் உலர வைக்க வேண்டும். இயந்திரத்திலிட வேண்டும். பின்பு அவல்களை 45 நிமிடம் உலர்த்தியில் உலர வைக்க வேண்டும். தரம் பிரித்து காற்று புகாமல் அடைத்து சேமிக்க வேண்டும். மற்றொரு செய்முறையாவது. சோள தானியங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து 3 மணி நேரம் மின் உலர்த்தியில் உலர வைத்து வறுக்கும் இயந்திரத்தில் 200° செ.கி. வெப்ப நிலையில் 5 நிமிடம் வறுத்து எட்ஜ் ரன்னர் இயந்திரத்தில் அழுத்தி அவல்கள் தயாரித்து ஆற வைத்து பேக்கேஜிங் செய்ய வேண்டும்.

சோள லட்டு
சோள மாவு 500 கிராம், தேங்காய் பவுடர் 250 கிராம், கோதுமை ரவை 250 கிராம், சர்க்கரை பொடி 1 கிலோ, நெய் 50 கிராம், பால் 200 மி.லி., பாதாம் பருப்பு 100 கிராம், ஏலக்காய் தூள் 3 கிராம். சோள மாவு, தேங்காய் பவுடர், கோதுமை ரவை ஆகியவற்றை தனித்தனியே நெய்யில் வறுக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி வறுத்த பாதாம் பருப்பு சேர்க்க வேண்டும்.

சோள பிஸ்கட்
சோள மாவு 750 கிராம், மைதா மாவு 250 கிராம், பேக்கரி @பேட் 250 கிராம், சர்க்கரை 500 கிராம், உப்பு 1 தேக்கரண்டி, பேக்கிங் பவுடர் 0.5 தேக்கரண்டி, பேக்கிங் சோடா 0.5 தேக்கரண்டி, தேவையான அளவு தண்ணீர். சர்க்கரை பவுடரையும் கொழுப்பையும் சேர்த்து கலக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து கலக்க வேண்டும். மாவை தேய்த்து விரும்பிய வடிவங்களில் வெட்டிக் கொள்ள வேண்டும். அடுமனை அடுப்பில் 200° செ.கி. வெப்ப நிலையில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.

முளை கட்டிய சோள மாவு
சோள தானியங்களை அறை வெப்ப நிலையில் 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு 5 மி.லி. 3.5 % சோடியம் ஹைப்போ குiளாரைட் கலைசலில் மூழ்க வைத்து எடுக்க வேண்டும். தானியங்களை 72 மணி நேரம் முளை கட்ட வேண்டும். அவ்வப்போது 1 மி.லி. தண்ணீரை தானியங்களின் மீது தெளிக்க வேணடும். பின்பு மின் உலர்த்தியில் 50° செ.கி. வெப்ப நிலையில் 24 மணி நேரம் 6 % ஈரப்பதம் வரும் வரை உலர்த்த வேண்டும். இயந்திரத்தின் மூலம் உமியை நீக்கி, மாவாக அரைத்து 1 மி. மீ.; கண்ணி சல்லடையில் சலிக்க வேண்டும். இந்த மாவினை இணை உணவு தயாரிக்க பயன்படுத்தலாம்.

இத்தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துள்ள சோள உணவுகளை தயாரிக்கலாம். மேலும் சோள தானியங்களை மதிப்புகூட்டி விற்பனை செய்யலாம்.

தகவல் : முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா, உதவி பேராசிரியர் (உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல்), வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை.

Spread the love