August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சோளத்தில் இலைக்கருகல் நோய் மற்றும் அதன் மேலாண்மை முறைகள்

அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, பர்மா, இத்தாலி போன்ற பல நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இது அதிகம் காணப்படுகிறது. பயிர் செய்யப்படும் எல்லா இரகங்களையும் தாக்கக் கூடியது. நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது, மகசூல் இழப்பு 25 சதம் வரையிலும் காணப்படுகிறது.

நோய்க்காரணி
இந்நோய் ஹெல்மின்தோஸ்போரியம் டர்சிகம் என்ற பூசணத்தால் உண்டாக்கப்படுகிறது. இதன் பூசண இழைகள் ஊண் வழங்கியின் திசுவறைகளின் இடையேயும், திசுவறைகளின் ஊடேயும் பரவிச் செல்லக் கூடியவை.

நோயின் அறிகுறிகள்
இந்நோயைத் தோற்றுவிக்கும் பூசணம் நீண்ட கண் வடிவப் புள்ளிகளை இலைகளில் தோற்றுவிக்கும். புள்ளிகள் பல செ.மீ வரை அகலமாகவும், நரம்புகளுக்கு இணையாகவும் தென்படும். புள்ளிகளின் நடுப்பகுதி வைக்கோல் நிறத்திலும், விளிம்புகள் அடர் பழுப்பு நிறத்திலும் தென்படும். புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து, இலைகளின் பெரும்பகுதி தாக்கப்படும் போது, இலைக் கரிந்து மடிந்து விடும். இந்நோய் பெரும்பாலும் முதிர்ந்த இலைகளையே தாக்கக் கூடியது.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
இந்நோய் காற்று மட்டும் விதை மூலமாகப் பரவக் கூடியது. மிதமான வெப்ப நிலையம், காற்றில் குறைந்த அளவு ஈரப்பதமும் இருக்கும் போது நோய் வேகமாகப் பரவக்கூடியது.

நோய்க்கட்டுப்பாடு உழவியல் முறைகள் :
இந்நோய் அடிப்பகுதியிலுள்ள முதிர்ந்த இலைகளையே அதிகம் தாக்குவதால், நோய்த் தாக்கப்பட்ட இலைகளை அப்புறப்படுத்தி அழித்து விடவேண்டும்.

மருந்து சிகிச்சை :
ஏக்கருக்கு சினப் – 400 கிராம் அல்லது மான்கோசெப்- 400 கிராம் வீதம், 250 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிரின்45– ம்நாளிலிருந்து, 15நாட்கள் இடைவெளியில் 2 – 3 முறை தெளிக்க வேண்டும்.

தகவல் : கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – தாவர நோயியல் துறை, 82488 33079, lakshmikumar5472@gmail.com, இரா. லிவிதா, முனைவர் பட்டப்படிப்பு மாணவி – தாவர நோயியல் துறை, 97514 23963, முனைவர்.த.சுதின் ராஜ், உதவிப் பேராசிரியர் – தாவர நோயியல் துறை, 94420 29913, suthinagri@gmail.com, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் –608 002.

Spread the love