January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூலையில் அறிமுகமாகிறதா ஓலா மின்சார ஸ்கூட்டர்

பிரபல வாடகை கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில் அந்த இ-ஸ்கூட்டர் எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக அந்த நிறுவனம் அளித்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதமே இந்த ஸ்கூட்டரில் விற்பனைக்கு வரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

மின்சார ஸ்கூட்டர்களின் தயாரிப்புக்காக ஓசூரில் பிரம்மாண்டமான ஆலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது. இந்த ஆலையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து தயாரிப்புக்கு தயாராகி விடும் ஓலா நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு 20 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த ஆலை சுமார் ரூ.2400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதத்திற்குள்ளாக ஆலை திறக்கப்பட்டால் ஜூலை மாதத்திலேயே முதல் இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்று ஓலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் 400 நகரங்களில் சுமார் 1 லட்சம் ஹைபர் சார்ஜர் நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் துவங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களில் ஒரு லட்சம் வரையிலான ஹைபர் சார்ஜர் நிலையங்களை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. முதல்கட்டமாக இந்த நிலையங்கள் மால்கள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்களில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த ஸ்கூட்டரில் தரப்படும் பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தாலே 50 சதவீதம் வரை சார்ஜ் நிரம்பிவிடும் என்றும், 18 நிமிட சார்ஜில் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சார்ஜிங் மையங்களின் இருப்பிடங்களை அறிந்துகொள்வதற்காக பிரத்யேக செல்போன் செயலி ஒன்றையும் ஓலா தரவுள்ளது. இந்த ஆப்பின் வாயிலாக சார்ஜிங் மையம் இருக்கும் இடம், வழி மற்றும் பிற முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love