ஹைதராபாத், மே 15
முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.557 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் மருந்துகள் விற்பனையின் வாயிலாக நிகர அளவில் ரூ.4,608 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ.4,336.1 கோடியைப் பெற்றது.
மேலும், ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.781 கோடியிலிருந்து 29 சதம் சரிவடைந்து ரூ.557 கோடியாக குறைந்தது.
2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.16,357 கோடியிலிருந்து ரூ.18,420 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரம், ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.2,026 கோடியிலிருந்து ரூ.1,952 கோடியாக சரிவடைந்துள்ளதாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு கடந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.25 (500%) இறுதி ஈவுத்தொகையாக அளிக்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.