மும்பை, மே 11
டாடா சன்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா குழும நிறுவன பங்குகளின் மொத்த மதிப்பு முதல் முறையாக ரூ.10 லட்சம் கோடி அளவீட்டைத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களில் சுமார் 14 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நேரடியாகப் பங்குகளை வைத்துள்ளது.அப்படி டாடா சன்ஸ் வைத்துள்ள 14 பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி அதாவது 10 டிரில்லியன் அளவீட்டை முதல் முறையாகத் தாண்டியுள்ளது.
டாடா சன்ஸ் போர்ட்போலியோவில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் பெருமளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர், டாடா கம்யூனிகேசன்ஸ், டாடா பவர், டாடா மெடாலிங்க்ஸ், டாடா ஜிவிகே ஹோட்டல்ஸ், ரெய்ல்ஸ் இந்தியா, டாடா ஸ்டீல் லாங் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 14 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 17.9 டிரில்லியன் டாலர், இது கடந்த வருடம் மார்ச் மாத முடிவில் வெறும் 9.2 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் சுமார் 94 சதவீத வளர்ச்சி அடைந்து டாடா சன்ஸ் பங்கு இருப்பின் மதிப்பை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள 14 நிறுவனங்களில் சுமார் ரூ.58,746 கோடி முதலீடு செய்துள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாடா பவர் ஆகிய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் பட்டியலிடப்படாத பல நிறுவனங்களில் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளது. குறிப்பாக Ewart Investments மற்றும்Panatone Finvest ஆகிய நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளது.