புது தில்லி, மே 19
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.89,319 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21வது நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் மோட்டார் வாகன விற்பனையின் வாயிலாக ரூ.89,319 கோடியை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளது. இது, 2020 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ரூ.63,057 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
கடந்த 2020-21 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த அளவில் ரூ.7,585 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இழப்பு ரூ.9,864 கோடியாக காணப்பட்டது. கடந்த 2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பானது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.11,975 கோடியிலிருந்து ரூ.13,395 கோடியாக உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,64,041 கோடியிலிருந்து ரூ.2,52,438 கோடியாக குறைந்ததாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.