சென்னை, ஏப்.22
இணையதளம் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை, 75 லட்சமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது:
தமிழக மின் வாரியத்தில் மொத்தம் உள்ள, 3 கோடி நுகர்வோரில், இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயம், குடிசை இணைப்பு தவிர, 2.75 கோடி பேர் கட்டணம் செலுத்த தகுதி உடையவர்.
இவர்களில், 60 லட்சம் பேர், 100 யூனிட் இலவச திட்டத்தில் வருவதால், அவர்களும் கட்டணத்தை செலுத்துவதில்லை. இந்த எண்ணிக்கை, மழை காலங்களில், 80 லட்சம் வரை உயர்கிறது என்றும், மீதியுள்ள அனைவரும் மின் கட்டணம் செலுத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இரு மாதங்களுக்கு சராசரியாக, ரூ.6,000 கோடி மின் கட்டணம் வசூலாகிறது. இதில், 60 லட்சம் பேர், ரூ.3,000 கோடி வரை, டிஜிட்டல் முறையில் செலுத்தினர். மற்றவர்கள், மின் கட்டண மையங்கள், அரசு இ – சேவை மையங்கள் போன்றவற்றில் செலுத்தினர். கடந்த ஆண்டு கோவிட் தொற்று பரவலை தடுக்க இ-சேவை மையங்களுக்கு வருவதை தவிர்க்க, டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துமாறு, நுகர்வோரை, மின் வாரியம் அறிவுறுத்தியது.தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதை ஏற்று, பலரும், டிஜிட்டல் முறையில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு மின் கட்டணம் வாயிலாக, ரூ.6,000 கோடி வசூலாகிறது என்றால், அதில், தற்போது, 75 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில், ரூ.3,600 கோடிக்கும் அதிகமாக செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரியவந்துள்ளது.