June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் ஆகிறது எர்டிகா

டொயோட்டா பிராண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா கார் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களாக உள்ள மாருதி சுசூகியும், டொயோட்டாவும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன.புதிய கார்களுக்கான முதலீடுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கூட்டுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களை டொயோட்டா தனது பிராண்டில் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, மாருதி பலீனோ, க்ளான்ஸா என்ற பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அடுத்து மாருதி சியாஸ் மற்றும் எர்டிகா கார்களை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை டொயோடடா துவக்கியுள்ளது. இந்த நிலையில், மாருதி எர்டிகா காரின் ரீபேட்ஜ் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்குக் கொண்டுவரப் படலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பண்டிகை கால விற்பனையைக் குறிவைத்து சற்று முன்னதாகவே இந்தக் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காரின் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அனைத்திலும் எந்த வேறுபாடுகளும் இருக்காது. மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் பயன்படுத்தப்படுகிறது. இதே என்ஜின்தான் டொயோட்டா பிராண்டிலும் பயன்படுத்தப்படும்.

இந்த என்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்சன்களில் இது கிடைக்கும்.

டொயோட்டா பிராண்டில் டாப் வேரியண்ட்கள் மட்டுமே ரீபேட்ஜ் செய்யப்படும் என்பதால் மாருதி எர்டிகா காரின் ஆரம்ப விலையைவிட டொயோட்டா பிராண்டில் வரும் எர்டிகா மாடலின் ஆரம்ப விலை அதிகமாகவே இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love