August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளிக்கு விலையில்லை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற நடவடிக்கை தேவை

கிருஷ்ணகிரி, மே 17

தக்காளிக்கு விலையில்லா நிலையில், ஏரியில் கொட்டும் சூழல் நிலவுகிறது. எனவே, மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் தக்காளி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு சுமார் 25,000 ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கரோனா ஊரடங்கால், தக்காளியை வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. மேலும், தக்காளியின் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலையும் குறைந்துள்ளது. காவேரிப்பட்டணம் பகுதியில் தக்காளி கிலோ ஒன்று, ரூ.2க்கு மட்டுமே விலை போவதால், நரிமேடு ஏரியில் தக்காளிகளை விவசாயிகள் கொட்டினர்.

இது குறித்து தக்காளி விவசாயிகள் தெரிவித்ததாவது : இப்பகுதியில் அதிகளவில் தக்காளி விளைவதால் அவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. தக்காளியை கிலோ, ரூ.2க்கு கேட்கின்றனர். தக்காளி சாகுபடிக்கான செலவு, அறுவடை கூலி, வாகன செலவு போன்றவற்றை கணக்கிட்டால், பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மார்க்கெட் வரை தக்காளியை கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் ஏரியில் கொட்டி விடுவதாக கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளியை சேமித்து வைப்பதற்காக ஒரு கிடங்கு மற்றும் தக்காளியை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றுவதற்கான நடவடிக்கையை, அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

Spread the love