தர்மபுரி, ஏப்.26
ஊரடங்கு காரணமாக தக்காளி அறுவடை பணி பாதிக்கப்பட்டது. அதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளில், 4,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அரூரில் செயல்படும் தனியார் காய்கறி மண்டிகளுக்கு அறிவித்த விடுமுறையால், விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கடும் வெயிலால், செடிகளில் தக்காளி விரைவில் பழுத்து விடுகிறது. ஏற்கனவே, ஒரு கிலோ தக்காளி, ரூ.2க்கு விற்பனையாவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தக்காளியை ஏற்றிச்செல்ல வாகனங்கள் வரவில்லை என்பதால், தக்காளி அறுவடை செய்யவில்லை. இதனால், வயல்களில், தக்காளி வீணாகி வருகிறது என அவர்கள் கூறினர்.