August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளி நாற்று நடவு பணி தீவிரம்

திருப்பூர், மே 19

தக்காளிக்கு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நாற்று நடவு பணிகளை உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுபகுதிகளில், கிணற்றுப் பாசனத்துக்கு காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. அதிக வரத்து உள்ளிட்ட காரணங்களால், கடந்த மாதம், தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதித்தனர். இருப்பினும், தென்மேற்கு பருவமழை சீசனில், தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், குட்டியகவுண்டனுார் சுற்றுப்பகுதியில், நாற்று நடவு பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது இச்சாகுபடியில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, தக்காளி சாகுபடியில், நுண்ணீர் பாசனம், குழித்தட்டு நாற்று உற்பத்தி, தண்ணீரில் கரையும் உரங்கள் ஆகிய தொழில்நுட்பங்கள் அதிகளவு பின்பற்றப்படுகிறது. முன்பு, தக்காளி விதைகளை நேரடியாகவும், விளைநிலத்திலேயே நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்து வந்தனர். தற்போது குழித்தட்டு முறையில், அதற்கென வடிவமைக்கப்பட்ட, ‘ட்ரே’யில், நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், நடவின் போது நாற்றுகளுக்கு இடையே தேவையான இடைவெளி கிடைக்கிறது. இத்தகைய நாற்றுகளை தனியார் நாற்றுப்பண்ணையிலும் உற்பத்தி செய்து, ஒரு நாற்று, ஒரு ரூபாய் வரை, விற்பனை செய்கின்றனர். இம்முறையில், நாற்றுகள் முளைக்காமல் வீணாவது தவிர்க்கப்படுகிறது. இம்முறைக்கு, மேட்டுப்பாத்தி அமைத்து, நுண்ணீர் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைப்பது அவசியமாகும். இந்த பாசன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், நீர் வீணாவது தடுக்கப்படுவதுடன், நீரில் கரையும் உரங்களையும் பயன்படுத்தலாம். பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் இந்த புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, அதிக மகசூல் எடுத்து வருகின்றனர்.

Spread the love