August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளி விலை சரிவு குப்பையில் வீசும் விவசாயிகள்

திருப்பூர், மே 14

உடுமலையில், தக்காளி விற்பனை மற்றும் விலை சரிவு காரணமாக, விவசாயிகள் குப்பையில் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி வரத்து சந்தைக்கு, நாள் ஒன்றுக்கு 70,000 பெட்டிகள் வரை காணப்படுகிறது. கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். ஊரடங்கால் வியாபாரிகள் வரத்து குறைந்து, விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ.40 வரை மட்டுமே விற்பனையாகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் : தக்காளி சாகுபடிக்கு, நாற்று நடவு, உழவு, களை எடுத்தல், மருந்து அடித்தல், தக்காளி பறிப்பு, போக்குவரத்து செலவு என ஏக்கருக்கு, ரூ.40,000 வரை செலவாகிறது. தற்போது வியாபாரிகள் வரத்து இல்லாததால், ஒரு பெட்டி, ரூ.40க்கு ஏலம் போகிறது. அதையும் கொள்முதல் செய்ய ஆளில்லாததால், குப்பையில் கொட்டும் நிலை, ஏற்பட்டுள்ளது. தக்காளி சாகுபடி அதிகம் உள்ள உடுமலை பகுதியில், விலையில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், உற்பத்தி செய்த உணவு பொருள் வீணாவதை தடுக்கும் வகையிலும், தக்காளி சாஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில், உடுமலை சந்தையில் தக்காளி சாஸ் உற்பத்தி செய்யும் வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தக்காளி செடிகளில் பறிக்க முடியாமல் வீணாகி வருகிறது. வரத்து அதிகரிக்கும் போது, விலை குறைவு, வீணாவதை தடுக்கும் வகையில், நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love