சென்னை, மே 5
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுவதால் தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வியாழக்கிழமை முதல் ஊரடங்கில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6.00 முதல் நண் பகல், 12.00 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, பல்வேறு மாவட்டங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை வழக்கம் போல மார்க்கெட்டுகளுக்கு அனுப்ப தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் இணநை்து இப்பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.