October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தனியார் விதை உற்பத்தியாளர் களுக்கான ஆலோசனை கூட்டம்

திருப்பூர், அக்.12

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் எம்.சுப்பையா, கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், தலைமையில் 08.10.2021 அன்று தாராபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிர் கனகராஜன், விதைச்சான்று இணை இயக்குநர் கோவை, மல்லிகா, விதை ஆய்வு இணை இயக்குநர் கோவை, வெங்கடாசலம் விதை ஆய்வு துணை இயக்குநர், கோவை, ஜெயராமன், விதை ஆய்வு துணை இயக்குநர் ஈரோடு, தனியார் விதை உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் பி.ஆ.மாரிமுத்து, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், திருப்பூர் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் விதைச்சான்று இயக்குநர் பேசுகையில், நமது மாநிலத்திற்கு தேவையான நெல் விதையில் 60-70 சதவிகிதம் நெல் விதைகள் தாராபுரத்தில் இயங்கிவரும் விதை சுத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உலகோர்க்கு உணவளிக்கும் உன்னத தொழிலான விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களில் முக்கியமானதும், உயிருள்ளதுமான இடுபொருள் விதையாகும். விதைகள் நல்ல தரமானதாக இருந்தால் மட்டுமே மற்ற இடுபொருட்கள் பலனளிக்கும்.

விதைப்பண்ணை அமைத்திட தரமான ஆதாரநிலை வழங்கிய வயல்வெளிகளில், பிற ரக கலவன்களை நீக்கி, வயல் தரங்களில் தேர்ச்சி பெறுமாறு பராமரித்து, அனைத்து நிலைகளிலும் விதைச்சான்று நடைமுறைகளை பின்பற்றி தரமான விதைகளை உற்பத்தி செய்யுமாறு விதை உற்பத்தியாளர்களை கேட்டுக்கொண்டார். விதை சுத்தி நிலையங்களில் நெல்விதைகளை ரகங்கள், நிலைகள் மற்றும் குவியல்கள் வாரியாக தனித்தனியே போதிய இடைவெளிவிட்டு முளைப்பு திறனுக்கு எவ்வித பாதிப்பின்றி, பிற ரக கலப்புயின்றி பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். எதிர்வரும் சம்பா பருவத்திற்கு ஏற்ற ரகங்களை சான்றுப்பணி முடித்து விவசாயிகளுக்கு வழங்கிட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உண்மைநிலை விதைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பணிவிதை மாதிரி (ளுநசஎiஉந ளுயஅpடந) பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டு, பின் விற்க வேண்டும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் விதைச்சான்று இணை இயக்குநர் பேசுகையில், தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கு, விதைச்சான்றுத் துறையில் விதைப்பறிக்கையை பதிவு செய்வது முதல் சான்றட்டை பொருத்துவது வரை உள்ள வழிமுறைகளை விதை உற்பத்தியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

விதை ஆய்வு இணை இயக்குநர், சான்று செய்ய விதைகளை கிடங்குகளில் தரம் குறையாமல் பராமரிக்க வேண்டிய முறைகளையும், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.

விதை ஆய்வு துணை இயக்குநர், கோவை, தாராபுரத்தில் விதை உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் இயங்குவதன் காரணத்தையும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்கள் தரமான விதைகள் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறினார். அதன் பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட உற்பத்தியாளர்களின் ஆலோசனைகளும், கருத்துக்களும் கேட்டு அறியப்பட்டது. இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு து.வசந்தாமணி, விதைச்சான்று அலுவலர் (தொழில் நுட்பம்) நன்றி கூறினார்.

அதன் பின்னர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் தலைமையில் விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதை ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் இலக்கு மற்றும் சாதனை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தரமான விதைகள் உற்பத்தி செய்திட விதைச்சான்று நடைமுறைகள் அனைத்து நிலைகளிலும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை முழுமையாக கண்காணித்திடவும், விதைத் தரங்களில் குறைபாடின்றி தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைத்திட ஏதுவாக பணிகளில் சுணக்கமின்றி முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டுமென்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

Spread the love