சென்னை, மே 7
தமிழகத்தின் 12வது முதல்வராக வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கும், 33 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எனத் தொடங்கி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழாவை அடுத்து அண்ணா, கருணாநிதி நினைவிடம், கோபாலபுரம் இல்லம் என சென்று வந்த ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு விரைந்து முதல் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் முதல்வரின் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள உதயசந்திரன் ஐஏஎஸ் முதல்வரின் முதலாவது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உமாநாத் ஐஏஎஸ், எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மாலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 25,000-ஆக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிகரிக்கும் நோய்த் தொற்றுக்கு ஏற்ப படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை.
நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே மருத்துவத்துறையின் மீதான சுமை குறையும். கரோனா உயிரிழப்புகளை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் அயராது உழைத்து வருகிறார்கள். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. களநிலவரத்தை மறைக்காமல் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டிசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.