May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை, மே 5

தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய இயக்குநர் ஆய்வு புதுக்கோட்டை வம்பன் தேசீய பயறு வகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் குறைந்தளவு தண்ணீர் பயன்பாடு, உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், துல்லியப் பண்ணைத் திட்டத்தில் காய்கறிகள் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னனியாறு உபநீர் வடிநிலப் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயல்விளக்கங்களை கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய இயக்குநர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம் 4.5.22 அன்று ஆய்வு செய்தார்கள்.

அன்னவாசல் வட்டாரத்தை சார்ந்த கட்டக்குடி, நகரம் மற்றும் முருகக்கோன்பட்டி கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் உளுந்து விதை உற்பத்தி, பயறுவகைப் பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் மற்றும் துல்லியப் பண்ணைத் திட்டத்தில் காய்கறிகள் சாகுபடி குறித்த செயல்விளக்கங்களைப் பார்வையிட்டு பின்பு பயறு உற்பத்தியாளர்கள் குழு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்கள்.

நீர் நுட்ப மைய இயக்குநர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பாக குறைவான மழைப்பொழிவைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த நல்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ், விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே பயன்படுத்தாமல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும், அதனால் நாம் உண்ணும் உணவில் விசத்தன்மை இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதனை வலியுறுத்தினார். இதற்கான ஏற்பாட்டை திட்ட உதவியாளர்கள் ரெ.அசோக்குமார் மற்றும் கு.பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love