சிவகங்கை, ஜூன் 6
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி பிரமனூர் கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினார். திருப்புவனம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.சுந்தரமகாலிங்கம், வரவேற்புரை வழங்கி திருப்புவனம் வட்டாரத்தில் கோடையில் நெல் சாகுபடிக்கு பதிலாக பயறு வகை சாகுபடி செய்து விதைபண்ணை அமைக்க கூறினார். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். தொழில்நுட்ப உரையாற்றிய டாக்டர் ராஜேஷ் (RNR Agri Developer, மதுரை), மானவாரி நிலத்தில் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். திருப்புவனம் உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி, வேளாண் இடுபொருட்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்ட உரம் அதன் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். திருப்புவனம் தென்னை ஒட்டு சேர்ப்பு மையம் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர், கலந்து கொண்டு நன்றி உரை வழங்கினார். திருப்புவனம் வட்டார அட்மா திட்ட மேலாளர் அன்பழகன் உதவி தொழில் நுட்ப மேலாளர் சண்முகபிரியா ஆகியோர் பயிற்சிக்கான முன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.