தூத்துக்குடி, ஏப்.28
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ. 603.33 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடியில் நடைபெற்ற வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்துக்குப் பிறகு தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு ஏப்.1 தொடங்கி கடந்த மாதம் 31ம் தேதி நிறைவடைந்த நிதியாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.603.33 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.407.69 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.65,061.21 கோடியிலிருந்து ரூ.72,511.45 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.9,518.05 கோடியாக இருந்த நடப்புக் கணக்கு சேமிப்புகள் கடந்த நிதியாண்டில் ரூ.11,685.27 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது.
வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த நிதியாண்டில் 3.44 சதமாகக் குறைந்துள்ளது. 2020 மார்ச்சுடன் நிறைவடைந்த முந்தைய நிதியாண்டில் அது 3.62 சதமாக இருந்தது. நிகரவாராக் கடன் 1.80 சதத்திலிருந்து 1.98 சதமாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.