கோவை, ஜூன் 7
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் அறவியல் துறை சார்பில் 6.6.22 அன்று 50 ஆவது உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியாளர்களாக இளநிலை, முதுநிலை, முனைவர், பட்டயப் படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் பொருட்டு சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக மிதிவண்டி பேரணியை துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி துவங்கி வைத்தார். பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் விழாவை சிறப்பித்தனர். ஏறக்குறைய 200 மாணவர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் சுற்றுசூழல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மிதி வண்டியில் ஊர்வலம் சென்றனர்.
முனைவர் மு.மகேஸ்வரி, பேராசிரியர் மற்றும் தலைவர், சுற்றுசூழல் மற்றும் அறிவியல் துறை அவர்கள் விருந்தினர்களை வரவேற்று 50 வது உலக சுற்றுசூழல் தின விழாவினுடைய முக்கியத்துவங்கள் பற்றி உரையாற்றினார். முனைவர் பி. பாலசுப்பிரமணியம், இயக்குனர், இயற்கை வள மேலாண்மை, இயக்ககம், இயற்கை வள பாதுகாப்பு பற்றி உரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, மண், நீர் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் முக்கியத்துவம், கழிவு மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். மேலும் “ஒரு மாணவர் ஒரு மரம் திட்டம் பற்றி எடுத்துரைத்ததோடு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பல்வேறு மேடை நிகழ்வுகைளை அரங்கேற்றினர்.