கோவை, ஜூன் 9
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் தேசிய உயிரி அறிவியல் மையம், பெங்களூரூ இணைந்து 29.04.2022 அன்று, ஆராய்ச்சி, கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, 08.06.2022 அன்று முதன்மையர் (முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலகம்) மற்றும் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் தகவலியல் துறை ஆகியவை இணைந்து ஒரு சிறப்பு விரிவுரை ஏற்பாடு செய்தது. இதன் மூலம் சுமார் 400 இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
முனைவர் இரா.ஞானம், பேராசிரியர் மற்றும் தலைவர், வரவேற்புரை வழங்கினார். முனைவர் ந.செந்தில், இயக்குநர் (தாவர முலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பவியல் மையம்) விருந்தினர்களை அறிமுகம் செய்தார். முனைவர் ஆர்.தமிழ் வேந்தன், பதிவாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சிறப்பு விரிவுரை மற்றும் ஒன்றிய அரசின் ஆதரவில் நிகழும் “கணினி வழி பயிற்சி – கணினி தொகுப்பு மரபணுவியல்” ஆகிய இரு நிகழ்வுகளுக்கு முன்னுரை வழங்கினார். சுமார் 2300 விண்ணப்பதாரர்களில், 200 நபர்கள் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.