கோவை, ஜூன் 14
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம் மற்றும் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் இணைந்து நடத்தும் நான்கு நாட்கள் “வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் புதிய உத்திகள்” பற்றி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் துவக்க விழா 14.06.2022 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய கூட்டுறவு விற்பனை இணையத்தின் கூடுதல் பதிவாளர், மேலாண் இயக்குநர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் குமார், அங்கக வேளாண்மை, ட்ரோனின் பங்கு, நீரில் கரையும் உரம், நானோ உரங்கள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் விதை உற்பத்தி போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கூடுதல் பதிவாளர், பொது இயக்குநர், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டம் ஆர்.ஜி.சக்தி சரவணன், தனது உரையில் வேளாண்மையில் புதியத் தொழில்நுட்பங்கள் உழவர்களின் வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றது என்றும் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பங்கினை இப்பயிற்சியின் மூலம் வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் புதிய உத்திகளை அறிந்து இத்தகவல்களை உழவர்களுக்கு பரவலாக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.