துணைவேந்தர் துவக்கி வைத்தார்
கோவை, ஆக. 4
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, வேளாண்மைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பிரிவில் தானியங்கி முட்டை கோழி தீவனம் இடும் இயந்திரம் மற்றும் மத்திய பண்ணைப் பிரிவு, உழவியல் துறையில் நெல் விதை சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை 2.8.22 அன்று தொடங்கி வைத்தார். நெல் விதை சுத்திகரிப்பு இயந்திரம் மணிக்கு 5 ஆயிரம் கிலோ நெல் விதையினை சுத்திகரிக்கும் திறனுடையது. இதன் மூலம், அனைத்து விதமான நெல் விதைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பசுந்தாள் விதைகளை சுத்திகரிக்க இயலும். இப்பிரிவு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் விதை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தின் திட்ட மதிப்பு ரூபாய் 9.96 லட்சமாகும். மேலும், தானியங்கி தீவனமிடும் இயந்திரமானது ஒவ்வொரு கோழிக்கும் தேவையான தீவனம் சீரான மற்றும் சரியான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதோடு வேலையாட்களின் தேவையும், நேரமும் குறைக்கப்படுகிறது. மேலும் தீவனமானது சுகாதாரமான முறையில் கோழிகளுக்கு அளிக்கப்பட்டு தீவன விரயமும் குறைக்கப்படுகிறது.