January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தர்பூசணி விற்பனை தீவிரம்

கடலூர், ஏப்.20

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சராசரியாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், கடலூர் நகரில் போதுமான மழை இல்லை.

நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் கொளுத்தியது. இந்த வெயிலுக்கு இதமாக கடலூரில் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கிலோ ரூ.20க்கும், வெட்டிய சிறிய துண்டு ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி காட்டுமன்னார்கோவில், சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளைகிறது.

இருப்பினும் கடலூருக்கு மரக்காணம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் தர்பூசணி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ ரூ.15க்கு வாங்கி, வியாபாரிகள் ரூ.20க்கு விற்பனை செய்கின்றனர்.

Spread the love