சென்னை, ஏப்.23
கரோனா பரவல் காரணமாக, தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில், தர்ப்பூசணி, கிர்ணி, முலாம்
பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறன்றன. இவை, தமிழகத்தின் தேவைக்கு போக, கர்நாடகா, மஹாராஷ்டிரா, தில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி
வைக்கப்படுகின்றன. கோடைக் காலங்களில், இவற்றின் விற்பனை அதிகரிக்கும். இதை கருத்தில் வைத்து, விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவல்
காரணமாக, தமிழகம், தில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு, குளிர்ச்சியான உணவு மற்றும்
பழங்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, ‘வைட்டமின் – சி’ சத்து மிகுந்த பழங்களை சாப்பிட வேண்டும் என, மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். இதனால், தர்ப்பூசணி,
கிர்ணி, முலாம் பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் விற்பனை குறைந்துள்ளதால், அவற்றை
சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.