தர்மபுரி, ஜூலை 23
தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு தினமும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மஞ்சள் மற்றும் வெண்பட்டு கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால் தர்மபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செங்கம், வாணியம்பாடி, ஓசூர், பெங்களூர், ஈரோடு, சேலம், நாமக்கல், உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 15- ம் தேதி வரை உள்ள 15 நாட்களில் 359 விவசாயிகள் 29,729 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இவை 1 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 722 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.772க்கு விலை போனது. குறைந்தபட்சமாக ரூ.277க்கும் சராசரியாக ரூ.602க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் 10 விவசாயிகள் 947 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட வெண்பட்டு கூடுகள் அதிகபட்சம் கிலோ 515 ரூபாயும், குறைந்தபட்சம் 475 ரூபாயும், சராசரி 585 ரூபாய் என மொத்தம் ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 397 ரூபாய்க்கு விற்பனையானது.
Spread the love