திண்டுக்கல், மே 11
முழு ஊரடங்கால் திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடியாகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் 10 டன் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது கரோனா ஊரடங்கால் காலை 5.00 முதல் 10.30 மணி வரை மார்க்கெட் செயல்பட மாநகராட்சி அனுமதித்துள்ளது. இந்நிலையில், கோயில்களில் திருவிழாக்கள் ரத்தால் பூக்கள் விற்பனை பாதித்துள்ளது. வெளி மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கும் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் செடியிலேயே பறிக்காமல் விட்டுள்ளனர். மார்க்கெட்டில் விற்பனையாகாத பூக்களை குப்பையில் கொட்டும் நிலையும் தொடர்கிறது.
இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. சீசன் காலத்தில் கிலோ ரூ.1000க்கு விற்பனையாகும் மல்லிகை ரூ.100க்கும், ரூ.1200க்கும் விற்பனையாகும் கனகாம்பரம் ரூ.300க்கும், இதர பூக்களான கோழிக்கொண்டை, சம்பங்கி, அரளி ஆகியவை கிலோ ரூ.10க்கும், பன்னீர் ரோஜா ரூ.20க்கும் விற்பனையாகிறது.