புது தில்லி, மே 11
நாள்தோறும் 1,000 ரயில்வே ஊழியர்கள் கோவிட் தொற்றால் பாதிப்படைவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
உலகளவில் அதிக ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம் இந்திய ரயில்வே. அதில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டையே உலுக்கி வரும் கரோனா தொற்று ரயில்வே ஊழியர்களையும் விட்டுவைக்கவில்லை.
இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் சுநீத் சர்மா தெரிவித்துள்ளதாவது:
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ரயில்வே அப்பாற்பட்டதல்ல. ரயில்வே ஊழியர்களும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துத் துறையாக இருப்பதால் மக்களையும், சரக்குகளையும் நாங்கள் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. தினசரி சுமார் ஆயிரம் பேர் இத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எங்களிடம் மருத்துவமனைகள் உள்ளன. படுக்கை வசதிகளை அதிகரித்துள்ளோம். ரயில்வே மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை உருவாக்கியுள்ளோம். தற்போதைய நிலையில் 4,000 படுக்கைகளில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் 1,952 ரயில்வே ஊழியர்கள் கோவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.