August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திராட்சை பழங்கள் தேக்கம் விவசாயிகள் வேதனை

திண்டுக்கல், மே 20

சிறுமலையடிவாரத்தில் திராட்சைப் பழங்களைப் பறிக்காமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஏ.வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, சாமியார்பட்டி, எர்ணாம்பட்டி, பச்ச மலையான்கோட்டை, ஊத்துப்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, செட்டியபட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் வெளி மாநிலத்திற்கு திராட்சை பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியாமலும் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது : சிறுமலை அடிவார பகுதிகளில் நாங்கள் திராட்சை சாகுபடி செய்து வருகிறோம். சொட்டுநீர் பாசனம் அமைத்தும், தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றியும் விவசாயம் செய்து கொண்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.1,00,000க்கு மேல் செலவு செய்து திராட்சை பழங்களை விளைவிக்கிறோம். சென்ற வருடம் கரோனா காலகட்டத்தில் ஒரு கிலோ திராட்சை ஐம்பது ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இந்த வருடம் ரூ.20க்கு கூட வாங்குவதற்கு ஆள்கள் இல்லை. மேலும், விவசாயப் பொருள்களை விற்பனை செய்வதற்குரிய நேரம் காலை எட்டு மணியிருந்து 12 மணி வரை இருந்தது. ஆனால் தற்போது காலை 10 மணி வரை மட்டுமே வியாபாரிகள் விவசாய பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எங்கள் தோட்டங்களில் உள்ள சுமார் 5,000 டன் திராட்சைப் பழங்கள் கொடியிலே பறிக்காமல் உள்ளன. வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் திராட்சை பழங்களை கொள்முதல் செய்ய தயங்குகின்றனர்.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ளது போல், திண்டுக்கல் மாவட்டத்தில் திராட்சை பழ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் திராட்சை பழங்களை கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக விவசாய பொருள்களை கொண்டு செல்வதற்கு, உரிய நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். திராட்சை கன்று தற்போது ஏழு ரூபாய்க்கு வாங்கி சாகுபடி செய்து வருகிறோம். இதனை அரசு கவனத்தில் கொண்டு, இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Spread the love