September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருப்பதியில் வெளியூர் பக்தர்களுக்கும் விரைவில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு

திருப்பதி, செப்.14

திருப்பதியில் கடந்த வாரம் முதல் உள்ளூர் பக்தர்கள் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெளியூர் பக்தர்களையும் இலவச தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க திருமலை- திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இலவச தரிசன டோக்கன்களை திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் வழங்கினால் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். எனவே கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் வெளியூர் பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை போல் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கும் என்று தேஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

Spread the love