May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

துவரையில் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

சிவகங்கை, மே 10

சிவகங்கை மாவட்டத்தில் பயறு வகை பயிர்களில் உளுந்து பயிரில் மட்டுமே விதைப்பண்ணை அமைக்கப்படுகிறது. துவரையிலும் விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட வாய்ப்பு உள்ளது. விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் துவரையில் தற்போது விதைக்கும் இரகத்தினை தவிர பிற ரகம் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது.

ரகங்களில் 170 நாள் வயதுடைய கோ 8 காரீப் பருவத்திலும், 100-105 நாள் வயதுடைய வம்பன்-3 அனைத்து பட்டங்களிலும் விதைக்கலாம். இருப்பினும் தாமதமாக விதைத்தால் துவரை சில நேரங்களில் காய்பிடிப்பது பிரச்சினை உள்ளதால் கவனமாக பட்டம் தேர்வு செய்ய வேண்டும்.

துவரை விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே ரகத்திலிருந்து வயலைச் சுற்றி 100 மீட்டர் இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும். ஒரு கிலோவிற்கு 50 கிராம் வீதம் ரைசோபியம் பயறு உயிர் உரம் விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். பூக்க ஆரம்பித்தவுடனும், பிறகு 15 நாட்கள் கழித்தும் என இரு முறை 2 சத டிஏபி கரைசலை நல்ல விதைப்பிடிப்பிற்காகத் தெளித்தல் வேண்டும். பயிர் வண்டு பாதிப்பைத் தடுக்க அறுவடைக்கு 3 முதல் 5 நாட்களுக்கு முன் தேவையான பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளவேண்டும். காய்களை 2-3 பறிப்புகளாக அறுவடை செய்வதால் விதை நலம் மற்றும் தரம் பாதுக்கப்படும்.

காய்களை உடனடியாக 12-13 சத ஈரப்பதத்திற்கு உலர்த்தி பின் விதைகளை பிரித்து எடுக்க வேண்டும். போதிய விதை கொண்ட இரகங்களை பிஎஸ்எஸ் 5×5 சதுர கன அளவு கொண்ட சல்லடைகளைக் கொண்டும் சிறிய விதை கொண்ட இரகஙகளை பிஎஸ்பிஎஸ் 6×6 சதுர கன அளவு கொண்ட சல்லடைகளைக் கொண்டும் நல் விதைகளை பிரித்து எடுக்கலாம். உடைத்த மற்றும் நிறம் மாறிய விதைகளை விதைக்காக தேர்வு செய்தல் கூடாது. எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி விதை அலுவலர்களை அணுகுமாறு சிவகங்கை விதைசான்று மற்றும்அங்கக சான்று உதவிஇயக்குநர் மதுரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love