August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

துவரை நடவு

நம் அன்றாட உணவில் தேவையான புரதச்சத்து அளிக்கக் கூடிய பயறு வகையில் துவரை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழா் சமையலிலும் துவரம் பருப்பு முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது. துவரையானது வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான புரதச் சத்தில் மூன்றில் ஒரு பங்கினைக் அளிக்கிறது. துவரையில் “பி“ விட்டமின்கள், தாது உப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன. கிராமத்துல, ‘வாழையை வச்சி வழுக்கி விழுந்தவன் இருக்கான். ஆனா, துவரையைத் தூவி துவண்டு போனவன் கிடையாது’ என்ற சிறப்புடைய துவரையை பயிரிட ஆடிப்பட்டம் உகந்ததாகும். செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்ட துவரம் பயறு தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. கோ 6, வம்பன் 2, எல்.ஆர்.ஜி 41கோ (துவரை) 7, வம்பன் (துவரை) 3, ஏபிகே 1 ஆகியவை துவரை இரகங்கள் ஆகும்.

துவரை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோடொ்மா விரிடி 4 கிராம் அல்லது R+டோமோனஸ்புளுரசன்ஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். பூஞ்சைக் கொல்லி (அல்லது) உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணி கொண்டு விதை நேர்த்தி செய்த பின் 24 மணி நேரம் கழித்துரை சோபியல் கல்சார் சி.ஆர்.ஆர்/சி.பி.ஆர், பாஸ்போபாக்டீரியா (பேசில்லஸ் மெகாடீரியம்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த பி.ஜி.பி.ஆர் (R+டோமோனஸ் எஸ்.பி) ஒரு பாக்கெட் (200கி) கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். செம்மண்ணாக இருந்தால் வி.பி.ஆர் 1 ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். துவரையை நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரித்து நல்ல லாபம் பெறலாம் என மதுரை விதைப் பரிசோதனை அலுவலர் தெரிவித்தார்.
நீண்ட கால துவரை வகைகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மானாவாரியாக அல்லது பாசன நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடவு செய்ய வேண்டும். துவரை நடவு செய்வதற்குத் தேவையான நாற்றங்காலை குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம். 6×4 அங்குல அளவு மற்றும் 200 மைக்ரான் தடிமன் கொண்ட பாலித்தீன் பையில் நிலத்தின் மண்:மணல்:தொழுவுரம் ஆகியவற்றை 1:1:1 என்றளவில் நிரப்பி நீர் தேங்குவதை தடுக்க 3-4 துளைகள் இட வேண்டும் அல்லது குழித்தட்டு நாற்றங்கால் முறையில் 200 காஜ் கருப்பு நிற குழித்தட்டுகளில் மக்கிய தென்னை நார்க்கழிவுகள் மற்றும் மணல் நிரப்பி விதைகளை விதைக்க வேண்டும். விதையை 0.2% கால்சியம் குளோரைடில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதையை கடினமாக்க 7 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். கடினமான விதைகளை 4கி/கிலோ மற்றும் 100 கிராம் ரைசோபியம் மற்றும் 100 கிராம் பாஸ்போபாக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை@2/பாலித்தீன் பையில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்ய வேண்டும். நல்ல தரமான துவரை பயிறு விதையானது 98% சுத்தத்தன்மை, 9% ஈரப்பதம் மற்றும் 75% முளைப்பு திறனுடன் இருத்தல் வேண்டும் என விதைப்பரிசோதனை அலுவலர் ம.மகாலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் சி.கமலாராணி மற்றும் பெரி.இராமலட்சுமி தெரிவித்தனர்.

மேலும் விபரங்களுக்கு சி.கமலாராணி, வேளாண்மை அலுவலர், தொலைபேசி எண் : 94873 48707 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love