June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி

சென்னை, ஏப்.26

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கிட அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொற்று பரவலால் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தற்போது ஆலையை திறக்க சம்மதித்துள்ளனர். இது குறித்து திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது, என தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும், ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தனர்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என்றும், ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான். நாளுக்கு நாள் கோவிட் அதிகரிக்கிறது, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது, என தெரிவித்துள்ளார். பெரும்பாலான கட்சிகள் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என யோசனையை தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து தமிழக அரசும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் மின்சாரம் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love