May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தும் முறை

விருதுநகர், மார்ச் 14

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் காண்டாமிருக வண்டு தாக்கப்பட்டு தாவர வளர்ச்சியை நாசம் செய்துள்ளது. தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது காண்டாமிருக வண்டு. இதை நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள்- மாஸ்லோ அணியினர் கண்டறிந்து இவ்வண்டினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறையைப் பற்றி விளக்கி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

தென்னந்தோப்புகளின் அருகில் உள்ள மக்கும் நிலையில் உள்ள பொருட்கள், உரக்குழிகள் போன்றவற்றை இல்லாமல் செய்வதன் மூலம் புழுக்கள் உண்டாகாமல் தடுக்கலாம்.

தென்னந்தோப்புகளின் அருகே உள்ள மக்கும் குப்பைகளை அடிக்கடி சோதனை செய்து, புழுக்களை அழிக்கலாம். உரக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோஃபிலியே என்ற பூஞ்சாணத்தைத் தெளிப்பதன் மூலம் குப்பையில் தோன்றும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

குருத்துகளில் காணப்படும் முதிர்ந்த வண்டுகளைக் கூர்மையான, நீளமான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குத்தி அழிக்கலாம். வேப்பங்கொட்டைத்தூள் மற்றும் மணலை 1:2 என்ற விகிதத்தில் கலந்து மட்டைகளுக்கு அடியில் வைக்கலாம்.

மண்பானைகளில் 1 கிலோ கெட்டுப்போன ஆமணக்கு புண்ணாக்கை, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தென்னந்தோப்புகளில் வைப்பதன் மூலம், காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்திழுத்து, அழிக்கலாம்.

இரவு நேரங்களில் விளக்குப் பொறிகள் வைப்பதால் வண்டுகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன. பேக்குலோ எனப்படும் வைரஸ் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வல்லது. 10-15 வண்டுகளை இவ்வைரஸ் கரைசலுக்குள் நனைத்து தென்னந்தோப்புக்குள் விடுவதன் மூலம், அது மற்ற வண்டுகளுக்கும் பரவி, கணிசமான அளவில் வண்டுகளை அழித்துவிடும்.

ரைனோலியூர் எனப்படும் கவர்ந்திழுக்கும் வேதிப்பொருளைத் தண்ணீரில் கலந்து, ஏக்கருக்கு 2 பக்கெட் என்ற அளவில் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளைக் கவர்ந்திழுக்கலாம். அதைத் தினசரி கவனித்து அழித்துவிட வேண்டும்.

5-10 நாப்தலின் குண்டுகளை மெல்லிய துளைகள் கொண்ட கனமான பைகளில் இட்டு, இளங்குறுத்து, முதிர்ந்த மட்டைகள் ஆகிய பகுதிகளின் அடியில் வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம்.

குருத்துகளின் உள்ளே கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் அல்லது ஈரம் நீக்கப்பட்ட கயோலின் மண்ணை, மணலுடன் கலந்து வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம்.

‘போரேட்’ என்ற குருணை மருந்தை 10 சதவீதம் அதாவது 5 கிலோ வீதம் துளையிடப்பட்ட சிறிய பைகளில் வைத்து நுனி மட்டைகளின் அடிப்புறத்தில் வைப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

Spread the love