June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் நிவர்த்தி செய்யும் முறைகள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அவர்கள் தென்னையில் போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள்பற்றி பின்வருமாறு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

தென்னையில் போரான்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள்
· பற்றாக்குறை அறிகுறி முதலில் இளம் குருத்துக்களில் தோன்றும். குட்டையான இளம் குருத்துக்கள் உருவாகும்.
· தென்னை இலைகள் இயல்பைவிட சுருங்கியும், மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்திலும் காணப்படும. தீவிர பற்றாக்குறையின் போது புதிய இலைக் குருத்துக்களின் நுனி கத்தி வடிவிலும் பழுப்பு நிற திரவம் சுரக்கும். இது கொக்கி இலை என்று அழைக்கப்படுகிறது.
· இலைக்காம்புகளின் அடிப்புறத்தில் புதிய இலைக்குருத்துக்கள் இல்லாமல் இருக்கும். படிப்படியாக இலைகள் சிறுத்து சிற்றிலை போன்ற தோற்றமளிக்கும்.
· குருத்தழுகல் நோய் போரான் குறைபாட்டினால் ஏற்படுகிறது.
· தீவிர நிலையில் பாலைகள் (மஞ்சரி) அழுகியும் நடுக்குருத்து மட்டுமே இருக்கும். இலைக்காம்புகளில் புதிய இலைக்குருத்துக்கள் இல்லாமல் கடைசியில் மரம் இறந்து விடும்.
· வறட்சியினால் பெரும்பாலும் போரான் குறைபாடு உருவாகும். சில நேரங்களில் வறட்சி பருவத்தில் அறிகுறிகள் தோன்றி ஈரமான பருவத்தில் மறைந்து விடும்.
· தீவிர நிலையில் இலைகள் வாடியும், நுனி இலை வளர்ச்சி குன்றியும் இலைகள் சுருங்கியும் இருக்கும். போரானின் அளவு குறையும்போது செல்களின் வளர்;ச்சி தடைபடுகிறது. மகரந்த பொடியின் குழல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பெண் பூக்களில் கருத்தரிப்பு பாதிக்கப்படுகின்றது. தேங்காய் சிறுத்து காணப்படுவதோடு அவற்றில் சீரான கனமில்லாத பருப்பும், தேங்காய் வெடித்தும் மற்றும் தரமில்லாத கொப்பரையும் உருவாகின்றது.
· குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய் உருவாகுதல், கோழி குஞ்சு (சிறிய மற்றும் பெரிய தேங்காய்கள்) போன்ற பற்றாக்குறை அறிகுறிகள் தேங்காய் குலையில் காணப்படுவதும் போரான் பற்றாக்குறையினால் காணப்படும் பொதுவான அறிகுறிகளாக அறியப்படுகின்றது.
நிவர்த்தி முறைகள்
தென்னை நாற்றங்காலுக்கு இலைவழி தெளிப்பாக போராக்ஸை 0.2 சதம் (2 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்) ஒரு நாற்றுக்கு 75-100 மிலி தெளிக்க வேண்டும்.
வளர்ந்தமரம் ஒன்றிக்கு போராக்ஸ் ஒரு வருடத்திற்கு

1 வருட மரம் 5 -10 கிராம்
2 -3 வருட மரம் 15 -20 கிராம்
4 வருடம் மற்றும் அதற்கு மேல் 35 -50 கிராம்

· தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் தென்னை நுண்ணூட்ட உரக்கலவை வளர்ந்த மரம் (5 வருடத்திற்கு மேல்) ஒன்றிற்கு 1 கிலோ / வருடம் என்றளவில் இட்டாலும் போரான் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம்.

Spread the love