May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் முறைகள்

புதுக்கோட்டை, மே 5

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரம் கே.ராயவரம் கிராமத்தில் சாகுபடி செய்யபட்டுள்ள தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.

வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தனது சிறப்புரையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் அரிமளம் ஆகிய வட்டாரங்களில் அதிகமான பரப்பளவில் தென்னைச் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் காணப்படுவதாகவும், எனவே விவசாயிகள் இதனைக் கட்டுப்படுத்திட கட்டாயமாகப் பூச்சிமருந்து எதுவும் தெளிக்க வேண்டாம் எனவும், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட இலைகளின் மீது, டிராக்டரினால் இயங்கும் சிறிய மோட்டார் மூலம் நீரைப் பீய்ச்சியடித்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

செயல்விளக்கதில் கலந்துகொண்ட தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையப் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரமேஷ், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த என்கார்சியா ஒட்டுண்ணிகள், கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், பொறிவண்டுகள் போன்ற இயற்கையான எதிரிகளைப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

தென்னையில் ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றையும், வரப்புப் பயிராகச் சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றையும் பயிரிடுவதனால் நன்மை செய்யும் பூச்சிகள் தென்னந்தோப்புக்குள் கவரப்பட்டு வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் எனவும், 5 அடிக்கு 2 ½ அடி என்ற அளவில் விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள்நிற ஒட்டும் பொறிகளை வயல்வெளியில் வைத்து முதிர்ந்த வெள்ளை ஈக்களைக் கவர்ந்தழிப்பது குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) மு.மதியழகன் விளக்கமளித்தார்.

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் மேலாண்மை குறித்த செயல்விளக்கத்தில் அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கா.காளிமுத்து, வேளாண்மை அலுவலர் (தரக் கட்டுப்பாடு) முகமது ரபி, அரிமளம் வட்டார வேளாண்மை அலுவலர் க.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் செயல்விளக்கத்தினைப் பார்வையிட்டனர்.

செயல்விளக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் உதவி வேளாண்மை அலுவலர் பி.ஆனஸ்ட்ராஜ் செய்திருந்தார்.

Spread the love