June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, அலிரோடைகஸ் ரூஜியோபெர்குலேட்டஸ் எனும் பூச்சி பெருமளவில் தாக்குதல் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட இவை இந்தியாவில் 2016-ம் ஆண்டு முதலாவதாக பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மரங்களில் தாக்குதல் ஏற்படுத்தியது. தற்போது தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

மேலாண்மை முறைகள்
மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி அகலம் 1 அடி அல்லது நீளம் 5 அடி அகலம் 1.5 அடி) ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம்.

மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை மரத்தைச் சுற்றி கட்டியும் முதிர்ந்த ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் வெள்ளை ஈக்கள் ஒட்டும் பொருட்டு விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் ஆகியவற்றை 3 நாட்களுக்கு ஒருமுறை தடவ வேண்டும்.

வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது என்கார்சியா ஒட்டுண்ணிகள், காக்ஸினெல்லிட் பொறி வண்டுகள், சிலந்திகள் மற்றும் கிரைசோபிட் இரை விழுங்கிகள் ஆகிய நன்மை செய்யும் பூச்சிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்சியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை 40 முதல் 70 சதவீதம் அளவுக்கு குறைக்கின்றது.

ஆகவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகள் இருக்கின்றனவா என்பதை வெள்ளை ஈக்கள் தாக்கியுள்ள ஓலைகளை பார்க்க வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் தென்னை ஓலையில் காணப்படும் வெள்ளை ஈக்களின் கூட்டத்தில் காணப்பட்டால் அதனுடைய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

தென்னந்தோப்புகளில், ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் இல்லாத பட்சத்தில்; என்கார்சியா ஒட்டுண்ணிகள் (100 , எக்டர்) உள்ள தென்னை ஓலைத்துண்டுகள் மற்றும் கிரைசோபா , அப்பர்டோகிரைசா இரை விழுங்கிகளின் முட்டைகளை (1000,எக்டர்) வெள்ளை ஈக்கள் அதிகமாக காணப்படும் ஓலைகளில் இணைக்க வேண்டும். தென்னை இலைகளின் கீழ்பகுதியில் உள்ள வெள்ளை ஈக்களின் பெருக்கத்தை தடுக்க தெளிப்பான மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். இலைகளிலிருந்து கரும்பூசண படலத்தை அகற்ற 1 கிலோ மைதா மாவை 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பின் 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வாழை அல்லது சீத்தா மரங்களை (10-20,எக்டருக்கு) வளர்ப்பதால் என்கார்சியா ஒட்டுண்ணியின் இனப்பெருக்கம் மற்றும் செயல்பாட்டினை அதிகரிக்கலாம். தென்னை மரம் ஒன்றுக்கு யூரியா 1.3 கிலோ, சு{ப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 50 கிலோ இரண்டாக பிரித்து ஜுன் – ஜுலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இடவேண்டும். TNAU தென்னை டானிக் ஒரு மரத்திற்கு 200 மிலி வீதம் வருடத்தில் இருமுறை வேரில் கட்ட வேண்டும்.

தகவல் : முனைவர் த.செந்தில் குமார், முனைவர் கோ.நெல்சன் நவமணிராஜ், முனைவர் பெ.சாந்தி மற்றும் முனைவர் வி.மூ.இந்துமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை.

Spread the love